வடபழனி முருகன் கோயிலில் பிரசாத கடை ஏலத்தில் பல லட்சம் இழப்பு

* ஆளும்கட்சி பிரமுகர் நெருக்கடியே காரணம்

* கோயில் ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 11: ஆளும்கட்சி பிரமுகர் நெருக்கடி காரணமாக வடபழனி முருகன் கோயில் பிரசாத கடை ஏலம் விட்டதில் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில்களில் ஒன்றான வடபழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலில் பிரசாத ஸ்டால் குத்தகை உரிமம் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. அதன்படி, கடந்தாண்டு ஏலம் விடப்பட்ட பிரசாத ஸ்டாலின் குத்தகை காலம் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதை தொடர்ந்து, பிரசாத ஸ்டால் ஏலம் தொடர்பாக வடபழனி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் நபர்களில் யார் அதிகபட்ச தொகை குறிப்பிடுகிறார்களோ அவர்களிடம் தான் ஸ்டால் குத்தகை உரிமம் வழங்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்ற நிலையில் ரூ.67 லட்சத்திற்கு மட்டுமே குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ெதாகை மிகவும் குறைவு என்றாலும், ஆளும்கட்சி முக்கிய பிரமுகரின் அழுத்தத்தின் பேரிலேயே குறைந்தபட்ச தொகைக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் பிரசாத ஸ்டால் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த பிரசாத ஸ்டாலை குத்தகை எடுப்பவர்கள் சர்க்கரை பொங்கல், முறுக்குதட்டு, புளியோதரை, தட்டுவடை, அதிரசம் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்த பிரசாத ஸ்டாலை குத்தகை எடுக்கும் நபருக்கு கோயில் உட்புறத்தில் உணவு பொருட்களை தயார் செய்வதற்கு தேவையான இடம் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த பிரசாத ஸ்டாலை ரூ.1 கோடி வரை குத்தகை கேட்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஆளும்கட்சி பிரமுகரின் நெருக்கடி காரணமாக பிரசாத ஸ்டால் உரிமம் ரூ.67 லட்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: