பல்லாவரம் அருகே ஆயில் கம்பெனியில் தீ விபத்து : ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே உள்ள ஆயில் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில், பம்மல் நாகல்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கம்பெனியில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான என்ஜின் ஆயில்களை டேங்கர் லாரிகளில் மொத்தமாக வாங்கி வந்து, அதனை ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை தனித்தனியாக பிரித்து கேன் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து அதனை ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வழக்கம் போல் ஆயில்களை பாக்கெட்களில் அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் மதிய வேளை உணவிற்காக அனைவரும் கேன்டீன் சென்றிருந்தனர். அப்போது, பாக்கெட்களில் அடைப்பதற்காக தயாராக பேரல்களில் பிடித்து வைத்திருந்த ஆயில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு இரண்டு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். விரைந்து செயல்பட்டதால், கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த ஆயில் பேரல்கள் தப்பியது. தீ விபத்து சம்பவம் நடைபெற்றபோது, ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு கம்பெனியை விட்டு உடனடியாக வெளியேறியதால், உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இதே கம்பெனியில் இதற்கு முன் இரண்டு முறை தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : oil company ,Pallavaram ,
× RELATED வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்