பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

ஆவடி, செப்.11: பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சிடிஎச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு அம்பத்தூரில் நேற்று  நடந்தது. மாவட்ட தலைவர் ஜி.விஜயா தலைமை தாங்கினார். முன்னதாக, அம்பத்தூர் நகர செயலாளர் செல்வி வரவேற்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் சுசிலா, மாநிலச்செயலாளர் பத்மாவதி, மாநிலத் துணைச்செயலாளர் மஞ்சுளா, மாவட்ட செயலாளர் மாணிக்கவல்லி, முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை  நிறைவேற்றவும், பல இடங்களில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்,  இளைஞர், மாணவர்களை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடவும்,  அம்பத்தூர், சித்து ஒரகடத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையை, 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், மாவட்டம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க நிரந்தர தீர்வு காணவேண்டும். மேலும், பாடி - திருநின்றவூர் வரை சி.டி.எச் சாலையை விரிவுப்படுத்திடவும், அம்பத்தூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கவும், கொரட்டூர் சுரங்கப்பாதை பணிகளை விரைவு படுத்திடவும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை தடுக்கின்ற போக்கை  கண்டிப்பது, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ரேஷன் கடைகளை மூடும் நடவடிக்கையை எதிர்ப்பது, ஜிஎஸ்டி வரி விதிப்பை அனைத்து பொருட்களின் விலையை உயர்த்துவதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச்செயலாளர்கள் சரவணன், அருள், மாவட்ட பொருளாளர் சண்முகவேல், அம்பத்தூர் நகர செயலாளர் மனோகரன், ஏஐடியுசி நிர்வாகிகள் கஜேந்திரன், நாச்சியப்பன், மயில்வாகனன், பலராமன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் இறுதியில், திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக விஜயா, செயலாளராக மாணிக்கவல்லி, பொருளாளராக மங்கையர்க்கரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : CDH ,road ,Badi ,Thiruninvur ,
× RELATED திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில்...