பல ஆண்டுகளாக சீரமைக்காமல் விட்டதால் இடிந்து விழும் நிலையில் வெங்கச்சேரி செய்யாற்று தரைப்பாலம்

காஞ்சிபுரம், செப்.11: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்து சேதமானது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தடைபட்டதால்  காஞ்சிபுரம் - உத்திரமேரூர் இடையிலான கிராம மக்கள் அவதிப்பட்டனர். பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக பயன்படுத்தினர். அதன்மீது தார்சாலை அமைத்து, கனரக வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 2016ம் ஆண்டு கனமழை பெய்து செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையேயான, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் பஸ்கள், மாகறல் பகுதியிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கி விடப்பட்டனர். உத்திரமேரூரில் இருந்து செல்லும் பஸ்கள், வெங்கச்சேரியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

இதனால், பொதுமக்கள் சுமார் 1 கிமீ தூரம் செய்யாற்று பாலத்தில் நடந்து சென்று, பஸ்களில் ஏறி பயணம் செய்கின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரம், பாலத்தில் நடக்கும் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும், பஸ்களில், வயலக்காவூர், வாலாஜாபாத் வழியாக, 40 கிமீ சுற்றி காஞ்சிபுரம் செல்கின்றனர். இந்த பாலத்தை இடித்து, புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டும் என வெங்கச்சேரி, மாகறல், ஆற்பாக்கம், காவாந்தண்டலம் உள்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள், தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்கி வருவதால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து துண்டிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகும். எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெங்கச்சேரி செய்யாற்றில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : dismantling ,bridge ,
× RELATED வதிலையில் பாலியல் தொந்தரவு: அரசு ஊழியர் மீது வழக்கு