குன்றத்தூர் - குமணன்சாவடி பிரதான சாலையில் விரிவாக்கப் பணியை கிடப்பில் போட்ட நெடுஞ்சாலை துறையினர்

குன்றத்தூர், செப். 11: குன்றத்தூர் - குமணன்சாவடி பிரதான சாலையில், நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கப்பணியை தொடங்கி கிடப்பில் போட்டதால், கொல்லச்சேரி முதல் மாங்காடு வரை, மக்கள் பயணிக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஜல்லிக்கள் பெயர்ந்து, அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனை தடுக்க சாலையை, விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூர் - குமணன்சாவடி பிரதான சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி, ஆவடி, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை பயன்படுத்தப்படுகிறது.
மேலும், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களுக்கு தினமும் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், பஸ், வேன் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

பிரசித்தி பெற்ற மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள குன்றத்தூர் - குமணன்சாவடி சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் விரிவாக்கப்பணி நடந்தது. ஆனால், தொடங்கிய நாள் முதல், சாலை விரிவாக்கப்பணி, ஆமை வேகத்திலேயே நடந்து, ஒரு கட்டத்தில் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனால் ஆங்காங்கே சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இந்த சாலையில் பைக்கில் செல்பவர்களின் நிலை சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி, சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களில் நிலை தடுமாறி விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, நிறைவடையாத சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் புழுதிகள் பறந்து, பின்னால் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. அத்துடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோரின் ஆடைகள் முழுவதும் தூசு படிந்து பாழாகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குன்றத்தூர் - குமணன்சாவடி பிரதான சாலையில் கொல்லச்சேரி முதல் மாங்காடு வரை, மக்கள் பயணிக்கவே லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது. இதனால், பல மாதங்களாக கடும் சிரமங்களை சந்திக்கிறோம். சாலையில் இருந்து எழும் புழுதிகளால், அக்கம் பக்கத்தில் உள்ள வீடு மற்றும் கடைகளில் பெருமளவு தூசு படிந்து காணப்படுகிறது. இதனால் சமீப காலமாக இப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு சாலையை விரிவாக்கம் செய்யாமல் இருந்தலே விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதுடன், மக்களின் வரிப்பணமும் வீண் விரயம் ஆகாமல் மிச்சமாகி இருக்கும். மக்களும் நாள்தோறும் தூசு படலத்தால் அவதிப்பட வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டு இருக்காது.

சமீப காலமாக அரசு, பெருகி வரும் விபத்தை கருத்தில் கொண்டு, சாலை விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து வருகிறது. இந்த நிலையில், மோசமான சாலை தான் விபத்து ஏற்பட முழு காரணம் என உணர மறுப்பது ஏனோ தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் செய்தால் தவறு இல்லை. அதுவே சாமானிய மக்கள் செய்தால் அது மன்னிக்க முடியாத பெருங்குற்றம். சாலை விதிகளை பின்பற்றாமல் தவறு செய்யும் வாகன ஓட்டிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது போல், இதுபோன்று பணிகளை சரிவர முடிக்காமல், சாலைகளை ஆங்காங்கே தோண்டி விட்டு, பணிகளை கிடப்பில் போட்டு, நாள் தோறும் விபத்து ஏற்படுத்தி வரும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சாலை பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : road ,Kundathoor - Kumanansavadi ,
× RELATED விரிவாக்க பணிகள் எதிரொலி கரூர் பகுதியில் இன்று மின் தடை