நெய்வேலி பகுதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து

நெய்வேலி, செப். 11: நெய்வேலி பகுதிகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை வழியில் உள்ளது. இச்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்கின்றன. தற்போது இந்த சாலை நான்கு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு சாலை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இச்சாலையில் நாள்தோறும் ஏராளமான பள்ளி வாகனங்கள், லாரிகள், பயணிகள் பேருந்துகள், என்.எல்.சி நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் என்எல்சி சாம்பல் கழிவுகளை வி.கே.டி சாலையில் உள்ள பள்ளத்தில் நிரப்புவதற்கு வரும் லாரிகள் தார்பாய் மூடாமல் செல்வதால் சாம்பல் பறந்து வாகன ஓட்டிகள் மீது படுகிறது.

Advertising
Advertising

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் சாலையில்  அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துகள் ஏற்படும் வகையில் அதிக வேகமாக செல்கின்றன. மேலும் லாரிகள், கார்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் சாலையில் செல்கின்றன. மேலும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் நகர்ப்புறங்களில் ஹாரனை அலற விட்டுக்கொண்டு அதிவேகமாக பேருந்துகள் செல்கின்றன. இதனால் சாலையில் செல்லும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பதற்றம் அடைகின்றனர். பெரும்பாலான வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி இல்லை. இதனால் அதிக வேகமாக செல்லும் வாகனங்களால் பெரு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து அதிகாரிகள், நெய்வேலி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: