×

வில்லியனூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு

வில்லியனூர், செப். 11: புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துத்திப்பட்டு பகுதியில் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கி வருகிறது. டெல்லியை சேர்ந்த சவுரவ் தபாஸ் என்பவர் ஆலையை நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும், சட்டவிரோதமாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதாகவும், கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அனுப்பினர். அதன்பேரில் அமைச்சர் கந்தசாமி, தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான், தொழிலாளர் நலத்துறை ஆணையர் வல்லவன் ஆகியோர் நேற்று காலை சம்பந்தப்பட்ட ஆலையை பார்வையிட்டனர்.அப்போது கம்பெனியில் முந்திரி எண்ணெய் தயாரிப்பது குறித்தும், கம்பெனியை சுற்றி கழிவு நீர் தேங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 ஆழ்குழாய் கிணறு இருப்பது குறித்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்தும், உரிமம் புதுப்பிட்டுள்ளதா எனவும் ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறுகையில், இங்கு சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். அனுமதி இன்றி ஆழ்குழாய்கள் அமைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கம்பெனியின் கிளை சேதராப்பட்டில் உள்ளது. இதேபோல் அங்கும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக லைசென்சை புதுப்பிக்காமல் இருப்பதும், மின்துறைக்கு மின்கட்டணம் செலுத்தாததும் தெரியவந்தது. இதனால் அந்த கம்பெனியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் முடிவு செய்திருக்கிறோம், என்றார்.

இதை தொடர்ந்து கம்பெனி நிர்வாகத்தினர், நாங்கள் உரிமம் புதுப்பிக்க சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொடுத்தால் அதிகாரிகள் அதனை விரைவில் முடித்து தருவதில்லை என அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அமைச்சர், உங்கள் கோப்புகளை எடுத்து வாருங்கள். அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கலாம், என கூறினார்.இதையடுத்து சேதராப்பட்டு பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலைகளில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு நடத்தினார். அப்போது அந்த நிறுவனங்களில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, இரும்பு கம்பெனிகளில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை, மாசு கட்டுப்பாட்டுத்துறை சான்றிதழ், உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பின்னர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கெமிக்கல் கம்பெனி, சோப்பு கம்பெனிகளில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களிடம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள், உங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படுகிறதா, என கேட்டறிந்தார். தொழிலாளர் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வின்போது உடனிருந்தனர்.அடுத் தடுத்து பல்வேறு தொழிற்சாலைகளில் அமைச்சர் கந்தசாமி அதிரடி ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Inspection ,factories ,area ,Villianur ,
× RELATED மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக...