சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீவைப்பு புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

திண்டிவனம், செப். 11: திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மானூர். இங்குள்ள ஹவுசிங் போர்டு, கோபாலபுரம், இந்திரா நகர், காலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் மொத்தமாக கொட்டப்படுகிறது. குறிப்பாக கோபாலபுரம் செல்லும் சாலையோரத்தில் குடியிருப்புகளின் மத்தியில் ஏராளமான குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை துப்புரவு பணியாளர்களே அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர்.இதேபோல் திண்டிவனம்-புதுச்சேரி செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சேகரித்து வைக்கப்படும் குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதிலிருந்து வரும் புகைமூட்டத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அங்கு வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கவும்,  துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் வீடுகளுக்கு நேரடியாக குப்பைகளை சேகரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: