எரிவாயு தகன மேடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், செப். 11:  கடலூர் மஞ்சக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு உட்பட்ட பெண்ணை ஆற்றின் கரைக்கு அருகே சுடுகாட்டில் எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய திமுக நகர் மன்ற தலைவர் தங்கராசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர் உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு தகன மேடை அமைக்க திட்டம் அமல்படுத்தப்பட்டது. திட்டத்தின்படி இரண்டு பகுதியிலும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால் மஞ்சக்குப்பம் பகுதியில் மட்டும் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பில் செலவிடப்பட்டு கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை சாதனங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் பழுது அடைந்துள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இந்த அலட்சியப்போக்குக்கு கண்டனம் தெரிவித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மக்கள் பிரதிநிதிகளிடம் இது தொடர்பாக முறையிட்டும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சக்குப்பம் எரிவாயு தகன மேடையை உடனடியாக திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், இணை ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், சுப்புராயன், ரவி, சிவாஜி கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, மாற்றுத்திறனாளிகள் சங்கம் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.Tags : Demonstration ,opening ,
× RELATED விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்