×

16ம் நூற்றாண்டை சேர்ந்த பிடாரி அம்மன் சிலை கண்டெடுப்பு

கடலூர், செப். 11:  கடலூர் அருகே தியாகவல்லியை சேர்ந்தவர் ராஜதுரை (60). விவசாயி. இவர் தன் வீட்டருகே உள்ள காலிமனையில் பனங்கொட்டைகள் புதைப்பதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது மண்ணிற்குள் கருங்கல் சிலை ஒன்று இருப்பது தெரிந்தது. அதனை அடுத்து அவர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கடலூர் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் அச்சிலை தோண்டி எடுக்கப்பட்டது. சுமார் மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பிடாரி அம்மன் சிலை, பீடம், இடுப்பு, தலைப்பகுதி என மூன்று துண்டுகளாக உடைந்த நிலையில் இருந்தது. அச்சிலையை கடலூர் வட்டாட்சியர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னாவிடம் ஒப்படைத்தார். சிலை குறித்து காப்பாட்சியர் கூறுகையில், இச்சிலை 16 அல்லது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பிடாரி அம்மன் சிலையாகும். சுடர் முடி அலங்காரத்துடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வலதுபக்க முன் கையில் திரிசூலமும், அதன் பின் பகுதி கையில் உடுக்கையும் உள்ளன. கழுத்தில் கண்டிகை சரபளி, சவடி ஆபரணங்கள் காணப்படுகின்றன என்றார். மேலும் இச்சிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.

சிலை குறித்து, தியாகவல்லி பகுதி மக்கள் கூறுகையில், சிலை கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்தபோது அப்பகுதியில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேறி குதிரைகள், வண்டிகள் மூலம் தியாகவல்லியில்  குடியேறியதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அப்போது அவர்கள் தங்களின் காவல் தெய்வமாக எல்லைப்பிடாரியம்மனுக்கு சிலை வடித்து கோயில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். அப்போது சிலை வடிக்கப்பட்டபோது விண்ணம் ஏற்பட்டதால் பிடாரி அம்மன் சிலை மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.


Tags : Bidari Amman ,
× RELATED மாமல்லபுரம் பிடாரி அம்மன் ரதம்...