விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பரபரப்பு மாணவர்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை

விருத்தாசலம், செப். 11: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை, கம்மாபுரம், நெய்வேலி, பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வெகுதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி வருகின்றனர்.மேலும் மங்கலம்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் கல்லூரி முடிந்து விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு பேருந்துகளில் பயணம் செய்யும்போது, தனியார் பேருந்துகள் அந்த நேரத்தில் வருவதற்கான நேரம் இல்லை என்பதால், அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி மாணவர்கள் செல்கின்றனர்.

அதுபோல் நேற்று மதியம் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தும், ஒரு பேருந்து கூட வரவில்லை. பிறகு வந்த ஒரு பேருந்தில் மாணவர்கள் ஏறும்போது அவர்களை ஏறக்கூடாது என நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் திடீரென பேருந்து நிலையத்தில் உளுந்தூர்பேட்டை மார்க்கம் செல்லும் பேருந்துகளை மறித்து பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறையிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வெளியேறும் வழியில் மாணவர்கள் உட்கார்ந்ததால் பேருந்து நிலையத்தில் இருந்து எந்த பேருந்துகளும் வெளியே செல்ல முடியாமல் சுமார் 2 மணிநேரம் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.


Tags : Roadside police ,bus stand ,
× RELATED புதுச்சேரி பழைய பேருந்து நிலையம்...