×

தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு குமரியில் 2,500 வக்கீல்கள் வேலை நிறுத்தம்

நாகர்கோவில், செப்.11 : தலைமை நீதிபதி இடமாற்றத்தை கண்டித்து, குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 5 நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்துக்கு செல்ல வில்லை. இதனால் நீதிமன்ற வளாகங்கள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்டம் முழுவதும் சுமார் 2,500 வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.

நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் செலஸ்டின், பொதுச்செயலாளர் பரமதாஸ், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு பொருளாளர் மகேஷ், முன்னாள் வக்கீல் சங்க தலைவர்கள் ராஜகுஞ்சரம், உதயகுமார், வெற்றிவேல், பால ஜனாதிபதி, வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், பூபதி, சுடலையாண்டி பிள்ளை, சதா, இளவரசு, பாலசுப்ரமணியம், அனிட்டர் ஆல்வின், மகேஸ்வரி, ஜெரால்டு, முத்துகுமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.வழக்கறிஞர்கள் பேசுகையில், உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் நடவடிக்கைகள் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக அமைந்துள்ளன. இதுபோன்ற செயல்பாடுகள் 1975ம் ஆண்டைய அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது போன்றுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயலாற்றும் உச்சநீதிமன்றம் எந்தவித நிர்பந்தங்களுக்கோ, சார்பு நிலைக்கோ தள்ளப்படாமல் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணி உயர்வு மற்றும் பணி இடமாற்றம் போன்றவற்றில் ஜனநாயக வெளிப்படை தன்மை மற்றும் கட்டுப்பாடுகள் காப்பாற்றப்பட வேண்டும். இல்லையெனில் 130 கோடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லை என்றனர்.


Tags : lawyers ,protest ,Kumari ,transfer ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...