×

குமரியில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் கருத்து கேட்பு கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் ஆஸ்டின் எம்.எல்.ஏ அறிக்கை

நாகர்கோவில், செப்.11:  ஆஸ்டின் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள வன பகுதிகள் வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ஐ சுட்டிக்காட்டி சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வன பகுதியை சுற்றியுள்ள மக்கள் வாழும் கிராம பகுதிகளை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக வனத்துறை 17 வருவாய் கிராமங்களை அறிவித்துள்ளது. இதில் 12 வருவாய் கிராமங்கள் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாகும். மேலும் இப்பகுதி பல்வேறு தொழில்கள் செய்து மக்கள் பிழைத்து வரக்கூடிய பகுதியாகும். விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிகள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். குமரி மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதி மிக குறைந்த பரப்பளவு ஆகும். ஏற்கனவே அதிகமான இடங்கள் வன பகுதியாக இருக்கிறது. ஏற்கனவே வன பகுதியாக இருக்க கூடிய சரணாலய எல்லையோடு வனத்துறையினர் தங்கள் எல்லையை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் வாழும் பகுதியில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு  சூழலியல் அதிர்வு மண்டலமாக மாற்றக்கூடாது என்று நான் கடிதம் கொடுத்து வலியுறுத்தியதின் அடிப்படையில் குமரி மாவட்டத்தை மட்டும் விட்டுவிட்டு இதர மாவட்டங்களில் சூழலியல் அதிர்வு மண்டலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாம் எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் மக்கள் கேட்பு கூட்டம் நடத்தி அதன் பின்னர் வனத்துறை எல்கை முடிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு சாந்தோம்நகர் பி.டி.பிள்ளை மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. எனவே பாதிக்கப்பட இருக்கின்ற வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம்
மாவட்ட வன அலுவலர் ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்கும் பொருட்டு 12.9.2019 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் நாகர்கோவில், சாந்தோம் நகர், ராமன்பிள்ளை தெருவில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகேட்பு கூட்டத்திற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகை தருவார்கள் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Ecological Vibration Stop Opinion Meeting ,Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து