×

குமரியில் 14ம் தேதி லோக் அதாலத் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி நீதிபதிகள் விழிப்புணர்வு பிரசாரம்

நாகர்கோவில், செப்.11 : குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள லோக் அதாலத் குறித்து, அரசு பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை நீதிபதிகள் ஒட்டினர். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டு வருகிறது. புகார்தாரர், எதிர்மனுதாரர்கள் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகிறது.இதில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது. நீதிபதிகள் முன்னிலையில் நேரடியாக பேசி தீர்வு காணப்படும். இந்த லோக் அதாலத் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் நீதிபதிகளே நேரடியாக இறங்கி உள்ளனர்.அந்த வகையில், வருகிற 14ம் தேதி லோக் அதாலத் நடத்தப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி ஆகிய 5 நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடக்கிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி கோமதி நாயகம், அரசு பஸ்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி மகிழேந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி அருணாசலம், கூடுதல் மாவட்ட நீதிபதி நம்பி, முதன்மை சார்பு நீதிபதி ஜோசப் ராய், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்களின் மூலம் (லோக் அதாலத்) இதுவரை 1,133 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.  ரூ.6 கோடியே 76 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான தொகை  இழப்பீடு மற்றும் தீர்வாக பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட நீதிமன்றங்களில் 12,408 சிவில் வழக்குகளும், 18,141 குற்ற வழக்குகளும் என மொத்தம் 30,544 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதில், லோக் அதாலத் மூலம் 3,320 வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என அடையாளம்காணப்பட்டுள்ளது என்று மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் தெரிவித்து உள்ளார்.

Tags : Magistrates ,Lok Adalat ,Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...