தனிநபர் சுகாதாரம் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

திருவாரூர், செப். 11: திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் சுகாதாரம் குறித்து நாளை மறுதினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதத்தினை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடுவதற்கு மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி தேசிய ஊட்டச்சத்து மாதம் தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் அனைத்து கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் நாளை மறுதினம் (13ம்தேதி)கிராமசபை கூட்டங்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி உள்ளதை உறுதி செய்தல், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் பயன்படுத்த உரிய கழிப்பறை வசதி உள்ளதா என்பதை உறுதி செய்தல், அங்கன்வாடி மையங்களை புனரமைப்பு செய்தல் மற்றும் தனிநபர் சுகாதாரம் குறித்து முடிவுகள் எடுப்பது, சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவி சுத்தம் செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுடன் சுகாதாரம் தொடர்பான உறுதிமொழியும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஊட்டச்சத்து தொடர்பாக மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் பெண்கள் போன்றவர்களை உள்ளடக்கிய அனைத்து தரப்பு மக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Sabha ,meeting ,
× RELATED கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை...