அணையை சீரமைக்கக்கோரி உண்ணாவிரத அறிவிப்பு அதிமுக எம்எல்ஏவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் கலசபாக்கத்தில் பரபரப்பு

கலசபாக்கம், செப்.11: கலசபாக்கம் அருகே செண்பகத்தோப்பு அணையை தமிழக அரசு சீரமைக்காவிட்டால், விவசாயிகளுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்த, அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 1990ம் ஆண்டு நடந்தது. தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களின் காரணமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு ₹34 கோடி செலவில், கடந்த 2007ம் ஆண்டு அணை கட்டுமான பணிகள் முடிந்தது. ஆனால், அணையின் 7 பிரதான மதகுகளை முறையாகவும், தரமாகவும் அமைக்கவில்லை.
முதன்முறையாக அணை நிரம்பிய சில நாட்களில், அனைத்து மதகுகளும் உடைந்து சிதறின. இந்நிலையில், செண்பகத்தோப்பு அணையின் மதகுகள் மறுசீரமைப்பு செய்யும் பணி ₹9.80 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என, கடந்த 29.7.2017 அன்று திருவண்ணாமலையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால், முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகளான நிலையில், இன்றுவரை அதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. முதல்வர் அறிவித்த நிதி போதுமானதில்லை, மதகுகளை சீரமைக்க ₹13 கோடி தேவைப்படும் என வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது. அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், வரும் 20ம் தேதிக்குள் செண்பகத்தோப்பு அணையில் பழுதடைந்த ஷெட்டர்களை சீரமைக்க தமிழக உத்தரவிட வேண்டும். இல்லையெனில் வரும் 21ம் தேதி 54 ஊராட்சிகளை சேர்ந்த 25 ஆயிரம் விவசாயிகளுடன் படவேடு வீரக்கோயில் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார். அதிமுக அரசுக்கு எதிராக அக்கட்சியின் எம்எல்ஏவே போராட்டம் நடத்துவேன் என எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கலசபாக்கம் ெதாகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அலிபாத் மதுரா விவசாயிகள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், செண்பகத்தோப்பு அணை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, எம்எல்ஏ அறிவித்துள்ள போராட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். போராட்டத்திற்கு தொகுதி மக்களிடையே ஆதரவு பெருகுவதால் கலசபாக்கம் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : AIADMK ,hunger strike ,
× RELATED அதிமுக கவுன்சிலரை கண்டித்து போஸ்டர்...