திருவண்ணாமலையில் கே.எஸ்.அழகிரி பேட்டி இந்தியாவின் பொருளாதாரம் படுபாதாளத்தில் விழுந்திருக்கிறது

திருவண்ணாமலை, செப்.11: இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் படுபாதாளத்தில் விழுந்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் படுபாதாளத்தில் விழுந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் கம்பெனியான அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. வாகன உற்பத்தியில் மூன்றரை லட்சம் வேலை வாய்ப்புகளை இதுவரை நாம் இழந்திருக்கிறோம். பிஸ்கட் கம்பெனி ஒரே நாளில் 10 ஆயிரம் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி உள்ளது.அதுமட்டுமின்றி நாட்டில் விவசாய வளர்ச்சி 2 சதவீதம் குறைந்திருக்கிறது. புதிய தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தினால் வேலை வாய்ப்பு இல்லை. பங்கு சந்தையில் இருந்து அந்நிய மூலதனம் உடனடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஒரு வைரஸ் ஏற்பட்டுள்ளது.

அந்த வைரசை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை முடிவு செய்வதற்கான தகுதியான நபர்கள் மத்திய அரசாங்கத்தில் இல்லை. ஜிடிபி வளர்ச்சி இன்றைக்கு 4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகாலம் சரி, தற்போது ஆட்சிபொறுப்பேற்று 100 நாட்களில் சரி பாஜ அரசாங்கம் ஒரே ஒரு துறையில் கூட சாதிக்க முடியவில்லை.5 ஆண்டுகால ஆட்சி என்பது இந்தியாவினுடைய துயரம். எப்படி சீனாவின் துயரம் மஞ்சள் நதியோ, அதேபோல இந்தியாவினுடைய துயரம் பாஜ ஆட்சி. மிகப்பெரிய உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை, குறைந்த நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்திற்கு மாற்றுவது சரியானது இல்லை.மத்திய அரசாங்கம் தொடர்ந்து நல்ல அதிகாரிகளை இழந்து வருகிறது. முதலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினமா செய்தார். பின்னர் சிபிஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்திய அரசாங்கத்தினுடைய நவரத்தினங்கள் என்று சொல்லக் கூடிய அற்புதமான அமைப்புகள் எல்லாம் இன்றைக்கு சிதைந்து, ஒளியிழந்து காணப்படுகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல, சர்வாதிகாரிகள் மட்டும்தான் இது போன்ற காரியங்களை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : KS Alagiri ,Thiruvannamalai India ,disaster ,
× RELATED திமுக-காங்கிரஸ் இடையே எந்த...