மணல் கடத்தியவரை விரட்டிச் சென்றபோது கடத்தல்காரருடன் போலீஸ்காரர் கிணற்றில் விழுந்து படுகாயம் செங்கம் அருகே பரபரப்பு

செங்கம், செப்.11: செங்கம் அருகே மணல் கடத்தியவரை விரட்டிச்சென்றபோது கடத்தல்காரருடன் போலீஸ்காரர் கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாச்சல் கிராமத்தில் ரோந்து சென்றார். ஜீப்பை காவலர் சத்தியமூர்த்தி(32) ஓட்டி சென்றார். அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை, இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்தினார். போலீசை பார்த்தவுடன் மணல் கடத்தி வந்தவர், டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, காவலர் சத்தியமூர்த்தி அவரை விரட்டிச் சென்றார். அப்போது, அங்கு சாலையோரத்தில் தண்ணீரின்றி வறண்டு இருந்த கிணற்றில் மணல் கடத்தியவரும், அவரை விரட்டிச் சென்ற காவலர் சத்தியமூர்த்தியும் அடுத்தடுத்து தவறி விழுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் மலர், டிஎஸ்பி சின்ராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், செங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, படுகாயம் அடைந்து கிணற்றில் தத்தளித்த காவலர் சத்தியமூர்த்தி மற்றும் மணல் கடத்தியவரை கிணற்றில் இருந்து மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து இருவரையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கால் எலும்பு முறிந்த நிலையில் காவலர் சத்தியமூர்த்திக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.விசாரணையில், மணல் கடத்தியவர் வாசுதேவன்பட்டியை சேர்ந்த கோபி(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல்செங்கம் போலீசார் கோபியை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : kidnapper ,
× RELATED போலீசாருக்கு கத்திக்குத்து