சோளிங்கர் அருகே பரபரப்பு சாலையில் சரிந்த சிமென்ட் மூட்டைகளை அள்ளிச்சென்ற பொதுமக்கள் லாரிகள் உரசியதால் ‘டோர்’ உடைந்தது

சோளிங்கர், செப்.11: சோளிங்கர் அருகே லாரிகள் உரசியதால் டோர் உடைந்து சிமென்ட் மூட்டைகள் சரிந்து விழுந்தது. இதனை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.அரக்கோணம் பகுதியில் தனியார் சிமென்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலையில் 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேலூருக்கு புறப்பட்டது. சோளிங்கர் அடுத்த பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிமென்ட் லாரி மீது மோதுவதுபோல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிமென்ட் லாரி டிரைவர் லாரியை இடதுபுறமாக திருப்பினார். இருப்பினும் சிமென்ட் லாரியின் வலதுபுறத்தில் உள்ள ‘பக்கவாட்டு டோர்’ மீது மற்றொரு லாரி உரசியது.
இதில் சிமென்ட் லாரியின் முன்பகுதி முதல் பின்பகுதி வரை ‘பக்கவாட்டு டோர்’ நொறுங்கியது. மேலும், லாரியில் இருந்த சிமென்ட் மூட்டைகள் சரிந்து சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் சிமென்ட் லாரி டிரைவர் சுரேஷ் லேசான காயம் அடைந்து மயங்கினார். அதேபோல் டிப்பர் லாரியின் வலதுபுறமும் சேதமானது.

விபத்து குறித்த தகவல் அருகே உள்ள கொடைக்கல், ெபருங்காஞ்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அங்கு வந்து சாலையில் கிடந்த சிமென்ட் மூட்டைகளை எடுத்துச் சென்றனர்.தகவலறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து டிப்பர் லாரி டிரைவர் அன்பு கொண்டபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Door ,
× RELATED லாரிகள் இன்று வழக்கம் போல ஓடும்