×

ராஜபாளையத்தில் மாற்றுச்சாலையில் பறக்குது மண் தூசு

ராஜபாளையம், செப். 10: ராஜபாளையத்தில் குண்டும், குழியுமான மாற்றுச்சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாஸ்க் அணிந்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.  
ராஜபாளையத்தில் உள்ள சத்திரப்பட்டி சாலையில், கடந்தாண்டு முதல் ரயில்வே மேம்பாலப் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால், பஸ், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தை மலையடிப்பட்டி சாலை வழியாக மாற்றியுள்ளனர். இந்த மாற்றுச்சாலை குண்டும், குழியுமாக தூசு பறக்கிறது. சில இடங்களில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி நடப்பதால், அந்த இடம் முழுவதும் செம்மண் சாலையாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது, 10 அடி உயரம் வரை மண் தூசு பறக்கிறது. இதனால், டூவீலர், சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்ககோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், சாலையை சீரமைக்க  நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சத்திரப்பட்டி சாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் முகத்தில் மாஸ்க் அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலம் மலையடிப்பட்டி சாலை வழியாக சென்று 4 முக்கு பகுதியில் நிறைவடைந்தது. அங்கு, ‘சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்தும், மாற்றுப்பாதையில் தார்ச்சாலை அமைக்கவும், குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களை சீரமைக்க கோரியும்‘ கோஷமிட்டனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...