×

சிவகாசியில் ஆமை வேகத்தில் நகரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி

சிவகாசி, செப். 10: சிவகாசியில் ஆமை வேகத்தில் நகரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீருக்கு தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை வறண்டு விட்டதால், அங்கிருந்து குடிநீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தினசரி 15 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் பெறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தற்போது நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெம்பக்கோட்டை அணையில் குடிநீர் பெற முடியாத சூழுல் உருவாகி வருவதால், நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

சிவகாசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்க ரூ.170 கோடியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டம் மூலம் நெல்லை மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் கிணறுகள் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இத்திட்டத்தில் சங்கரன்கோவில் நகராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பழவூரில் இருந்து தாமிரபரணி நீர் குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு, இங்கு தேக்கி வைக்கப்படும். இங்கிருந்து புளியங்குடி, சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு தனியாக குழாய் பதித்து தாமிரபரணி நீர் கொண்டு செல்லப்படுகிறது.

சிவகாசி நகராட்சி பகுதியில் தற்போது தாமிரபரணி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் பணிகள் மந்த கதியில் நடப்பதால் இத்திட்டத்தில் குடிநீர் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்பேத்கார் சிலை பின்புறம் உள்ள கிருதுமால் ஓடையில் புதிதாக கட்டியுள்ள தண்ணீர் தொட்டியில் தாமிரபரணி நீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய படவுள்ளது. இத்திட்டத்தில் தினமும் 70 லட்சம் லிட்டர் வரை  குடீநிர் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பணிகள் மந்த கதியில் நடப்பதால் இத்திட்டத்தில் குடிநீர் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவே, சிவகாசி நகராட்சி பகுதி மக்களின்குடிநீர் தேவை நிரந்தரமாக போக்கிடும் வகையில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படு–்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து