×

வனத்துறை வாரவிழா கலைப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்பு

ராமநாதபுரம், செப்.10:  ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் வனத்துறை வாரவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் வன உயிரின வார விழா அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடத்தில் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  மாணவ, மாணவிகளிடையே கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்த போட்டிகளை மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பேச்சு, ஓவியம், வினாடி-வினா என போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலத்திலும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் 25 பள்ளிகள், 7 கல்லூரிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.
 
மனித வன உயிரின மோதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எனும் தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை கலந்துகொண்டனர். ஓவிய மற்றும் வினாடி வினா போட்டிகளில் எல்கேஜி முதல் கல்லூரி வரை அனைவரும் கலந்துகொண்டனர். மாணவ, மாணவியர் வரை பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் நேஷனல் அகாடமி பள்ளி 22 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. கல்லூரி அளவிலான போட்டிகளில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி குழுவினர் 14 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. 5 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற 13 பேர் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர். பள்ளி அளவிலான தமிழ் பேச்சு போட்டியில் மாற்றுத்திறனாளி ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தனர். போட்டியின் நடுவர்களாக வனச்சரக அலுவலர்கள் சிக்கந்தர்பாட்சா, வெங்கடேஷ், மற்றும் வன உயிரின குற்றப்புலனாய்வு அலுவலர் வெங்கட், ஆசிரியர்கள் கணேசபாண்டியன், ஆண்டனிதாஸ் ஆகியோர் பணியாற்றினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : School ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி