ஓணம் பண்டிகையையொட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு

ஒட்டன்சத்திரம், செப். 10: ஓணம் பண்டிகையையொட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் சென்னை கோயம்பேட்டிற்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய மார்க்கெட்டாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவிற்கு 90 சதவீத காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினசரி வணிகம் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை நடக்கும். இந்நிலையில் கேரள மாநில மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் மற்றும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்வடைந்துள்ளது. நேற்று மார்க்கெட்டில் காய்கறிகள் விலை நிலவரம் (ஒரு கிலோ) அவரை ரூ.40, வெண்டை ரூ.30, கத்திரி ரூ.20, முட்டைகோஸ் ரூ.20, கொத்தவரை ரூ.60, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.40 மற்றும் தக்காளி ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.120 என விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த மாதங்களில் பண்டிகை, முகூர்த்தம் இல்லாததால் மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது. தற்போது தொடர் முகூர்த்தம், பண்டிகை காலம் துவங்கி விட்டதால் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை சூடு பிடித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : festival ,
× RELATED பொங்கலுக்கு பிறகும் குறையாத காய்கறி...