ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடான லால்குடி - புறத்தாக்குடி தார்சாலையின் அவலம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

லால்குடி, செப்.10: லால்குடியில் இருந்து புறத்தாக்குடி செல்லும் தார்சலை சிதைந்து ஜல்லிகற்களாக ஆனதால் வானக ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து திருமங்கலம், நகர், நெய்க்குப்பை வழியாக புறத்தாக்குடி வரை செல்லும் சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், மினி பஸ்களும் மற்றும் விவசாய பணிகளுக்காக டிராக்டர்களும், மாட்டுவண்டிகளும் சென்று வருகின்றன. மேலும் நகர், நெய்குப்பை, மகிழம்பாடி, புறத்தாக்குடியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும், பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கல்லூரிகளுக்கும் லால்குடி-புறத்தாக்குடி தார்சாலையை பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 10 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட இந்த தார்சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்த கரடு முரடாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களும், பேருந்துகளும் அடிக்கடி பழுது ஏற்பட்டு விபத்துக்குள்ளாகி வருகின்றது. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை இந்த சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள், இப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை சாலையை சீரமைக்க முன்வரவில்லை. தற்போது விவசாயம் செய்ய இடுபொருட்களை கொண்டு செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: