சாலை, சாக்கடை, தெருவிளக்குகள் பராமரிப்பில்லை பேரூர் கிராமமக்கள் சாலை மறியல் முயற்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

முசிறி, செப்.10: முசிறி தாலுகா பேரூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசு அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தில் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பாக 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில்லை. கிராமத்தில் சாலை, சாக்கடை வசதி, தெருவிளக்குகள் ஆகியவற்றை முறையாக பராமரிப்பதில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பேரூர், ஜெம்புநாதபுரம், முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதன்படி நேற்று சாலை மறியல் செய்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேரூர் கிராமத்தில் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜான்கென்னடி, முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருவாய்துறை முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

Advertising
Advertising

அப்போது பேரூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு விதிமுறைகளை பின்பற்றி வேலைகள் வழங்கப்படுவது, நிலுவை தொகையினை விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், வேலை இல்லாத காலங்களுக்கு நிவாரண தொகை வழங்கிட கலெக்டர் அலுவலகத்திற்கு கருத்துரு அனுப்புவது, கிராம சபை கூட்டங்களுக்கு தண்டோரா மூலம் முன்கூட்டியே பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு வழங்குவது, கிராமத்தில் தெருவிளக்குகள், குடிநீர் குழாய்களில் உடைப்புகளை ஏற்படுத்தும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, கூடுதல் போர்வெல் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பது, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். முன்னதாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம், ஒன்றிய பொறியாளர் விமல்ராஜ், மண்டல துணை வட்டாட்சியர் விஜய் மற்றும் பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நல்லுசாமி, பழனிச்சாமி, கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: