ஊழியர் தற்கொலை வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு

பரமத்திவேலூர், செப்.10: பரமத்திவேலூர் அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பரமத்தியை அடுத்துள்ள பில்லூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் விடுப்பில் சென்றதையடுத்து, கிளார்க் வேலுசாமி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், வேலுசாமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்குகளில் முறைகேடு நடந்திருக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று, திருச்செங்கோடு கூட்டுறவு பதிவாளர் மோகன் தலைமையிலான குழுவினர், வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வங்கி கணக்குகளில் இருப்பு விபரங்கள், கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், வங்கியை முற்றுகையிட்டனர். ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள், 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அழைத்து அவர்களின் கணக்குகள் முறையாக சரிபார்க்கப்படும். மேலும், விவசாயக் கடன்கள், நகை கடன்கள் உள்ளிட்ட அனைத்து கணக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர். இவ்வங்கியில் சுமார் 50 லட்சம் வரை முறைகேடு நடந்திருக்கக் கூடும் என வாடிக்கையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags : Agricultural Cooperative Bank ,
× RELATED மதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது