‘குவார்ட்டர்’ வாங்க பணம் தராத தந்தையை கொன்ற மகன் கைது

கோவை, செப்.10:  கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள முருகன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65). இவர் மகன் குமரவேல் (31). திருமணமானவர். கூலி தொழிலாளி. இவர் தினமும் மது குடித்து விட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 3ம் தேதி கிருஷ்ணன் வீட்டில் இருந்தார். அப்போது, குமரவேல் தந்தையிடம் குவார்ட்டர் வாங்க 100 ரூபாய் கேட்டார். அதற்கு அவர், பணமில்லை, நீ தினமும் மது குடித்து ஜாலியாக சுற்றுகிறாய், குடும்பத்தை கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருக்கிறாய் எனக்கூறியுள்ளார்.

இதை கேட்ட குமரவேல், எனக்கு குடும்பம் முக்கியமில்லை, நான் யாரையும் கவனிக்க மாட்டேன். குவார்ட்டர் வாங்க பணம் கொடு என மீண்டும் வற்புறுத்தினார். பணம் தர மறுத்த கிருஷ்ணன், மகனை எச்சரித்தார். இதில் கோபமடைந்த குமரவேல், வீட்டில் இருந்த மர கட்டையை எடுத்து கிருஷ்ணனின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன்  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘என் அப்பாவிடம் பணம் கேட்ட போது அவர் என்னை கேவலமாக பேசினார். மது குடிக்க அவரை மிரட்டி பணம் வாங்க முயன்றேன். அவர் திட்டியதால் கோபமடைந்து தாக்கினேன். அவர் இறந்து போவார் என நான் எதிர்பார்க்கவில்லை, ’’ என்றார்.

Tags :
× RELATED தந்தையை திட்டிய மகன் கைது