ஈரோடு, செப். 10: வாரம் இருமுறை கூலி வழங்கும் நடைமுறையை தொடராவிட்டால் கஞ்சித்தொட்டி திறப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டம் நடத்தப்படும் என கைத்தறி நெசவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கூட்டுறவு சங்கத்தில் 726 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான பாவு நூல் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்பட்டு பெட்ஷீட் உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டிற்கான நெசவு கூலியானது துவக்கத்தில் தினமும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வந்த நிலையில் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு வாரம் ஒரு முறை சனிக்கிழமையன்று மட்டுமே கூலி வழங்கப்பட்டு வருகிறது.