×

பஸ் பாஸ் இருந்தும் பள்ளி மாணவனிடம் பஸ் கட்டணம் வசூல் செய்தவர் மீது நடவடிக்கை கலெக்டரிடம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.10: பள்ளி மாணவனிடம் பஸ் கட்டணம் வசூலித்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 418 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அறந்தாங்கி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொடுத்த மனுவில், எனது மகன் முகிலன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 5ம் தேதி பள்ளிக்கு செல்ல அறந்தாங்கி செக்போஸ்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறினான். அப்போது பஸ்சில் இருந்த நடத்துனரிடம், போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பஸ் பயண அட்டை, தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்ட பரிந்துரை சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து உள்ளார். அப்போது, நடத்துனர் பயணச்சீட்டு வாங்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் உன்னை இறக்கிவிடுவேன் எனக் கூறியுள்ளார். தமிழக அரசும், போக்குவரத்துத்துறை சார்பில் பள்ளி சீருடையில் இருந்தாலும், கடந்த ஆண்டு வழங்கிய பஸ் பாஸ் இருந்தாலும், பள்ளி மாணவர்களை இலவசமாக ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் பள்ளி மாணவனுக்கு பஸ் கட்டணம் வசூல் செய்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் கொடுத்த மனுவில், கொத்தமங்கலம் ஊராட்சியும், வடகாடு ஊராட்சியும் திருவரங்குளம் ஒன்றியத்திலேயே பெரிய ஊராட்சிகள் ஆகும். இந்த 2 ஊராட்சிகளையும் இணைக்கும் சாலை மிக சிறப்பாக உள்ளது. கொத்தமங்கலத்தில் இருந்து வடகாடு வழியாக புதுக்கோட்டை செல்ல பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags : collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...