×

திருமயம் அருகே சேதமடைந்த சாலையை 10 ஆண்டாக சீரமைக்காத அவலம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருமயம்,செப்.10: திருமயம் அருகே 10 வருடங்களுக்கு மேலாக சேதமடைந்து கிடக்கும் சாலையை சரி செய்ய அதிகாரிகளிடம் கெஞ்சியும், போராடியும் பாத்தாச்சு நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து கானப்பூர், கொத்தமங்களம் வழியாக காரைக்குடி செல்லும் முக்கிய சாலை 12 ஆண்டுகளுக்கு முன் செப்பனிடப்பட்டது. இது புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் ராயவரம், செங்கீரை, பெருங்குடி, முன்சந்தை, ஆயிங்குடி உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியாகதான் காரைக்குடி செல்ல வேண்டும். இதனிடையே தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் இந்த சாலையை கடக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையின் பெரும் பகுதி குண்டும், குழியுமாக மாறி கரடு முரடாக காட்சியளிக்கிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் உள்ள மண் மழை நீரால் அரிக்கப்பட்டு படுகுழியாக மாறி வருகிறது. இதனால் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் எதிரே கனரக வாகனங்கள் வரும் போது சாலையை கடக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. ராயவரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் எல்லை வரை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் கரடுமுரடாக மாறிய நிலையில் இதனை தொடரும் சிவகங்கை மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராயவரம்-காரைக்குடி சாலையை உடனே செப்பணிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டங்களால் பயனில்லை

ராயவரம்-காரைக்குடி சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் முறையிட்டனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக மக்களிடத்தில் தெரிவிப்பதோடு சரி அதன் பின்னர் சாலை சீரமைப்பதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இரண்டு முறைக்கு மேல் சாலை மறியல் செய்தனர். அதற்கும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையை சரி செய்ய கெஞ்சியும், போராடியும் பயனில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

தார் சாலை மண் சாலையானது

பழுதடைந்த சாலையில் பெரும்பகுதி பள்ளமாக காணப்பட்டது. இதனால் மழை காலங்களில் மழை நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி வாகன போக்குவரத்துக்கு கடும் சிரமத்தை கொடுத்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பெண்களை கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தில் மணல் நிரப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது தார் சாலை மணல் சாலை போல் காட்சியளிப்பதோடு சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் தூசு காற்றில் பறப்பதால் வாகங்களை பின்தொடரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சைக்கிலில் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்திக்க வேண்டி உள்ளது.

பாலங்களும் படுமோசம்

ராயவரம்-காரைக்குடி சாலை பழுதடைந்துள்ளது ஒருபுறம் இருக்க சாலையில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்திருப்பது வாகன ஓட்டிகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது. அந்த சாலையில் உள்ள பாலங்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இநிநிலையில் பாலங்கள் ஆங்காங்கே சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்பட்டு வரும் நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம் ஒன்று கடந்த வருடம் பெய்த மழையில் வௌ;ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது குறிப்பிடிதக்கது. எனவே அதிகாரிகள் சாலையுடன் பாலத்தையும் சாp செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதிகாரிகள் பழைய டயலாக்

ராயவரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் இந்த சாலை அதிக மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும். இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தும் போது சம்பவ இடத்திற்கு வரும் அதிகாரிகள் சாலை ஒரு மாதத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றனர்.
ஆனால் அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினால் அப்போது சம்பவ இடத்திற்கு வரும் அதிகாரிகள் பழையை டயலாக்கை சொல்லிவிட்டு செல்கின்றனர். இது போல் பல முறை நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தொpவிக்கின்றனர்.

Tags : Motorists ,road ,Thirumayam ,
× RELATED குண்டும் குழியுமாக மாறிய நாசரேத் - இடையன்விளை சாலை: வாகன ஓட்டிகள் திணறல்