×

மண் வளங்களை காக்க உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் வேளாண் பேராசிரியர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.10: மண் வளங்களை காக்க உயிர் உரங்களை விவசாயிகள் பயன் படுத்த வேண்டும் என வேளாண் பேராசிரியர்கள் வலியுத்தியுள்ளனர். பயிர் சாகுபடியில் மிக அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக மண்ணின் வளம் பாதிப்படைந்ததோடு, மண்ணில் காணப்படும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. அதனால் மண் வளங்களை காக்க உயிர் உரங்களை விவசாயிகள் பயன் படுத்த வேண் டும் என வேளாண் பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், பூமியின் மேற்புறத்திலுள்ள ஒரு கிராம் மண்ணில் 10 லட்சம் நுண்ணுயிர்களும், அடிப்பகுதியில் அதாவது பயிர்களின் வேர்பாகத்தில் 10 லட்சம் நுண்ணுயிர்களும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இந்த நுண்ணுயிர்களில் பயிருக்கு நன்மை தருபவற்றை கண்டறிந்து பிரித்து செயற்கை முறையில் அவை வாழ்வதற்கான சூழ்நிலைகளில் தயார் செய்து வழங்கப்படுபவைகள் தான் உயிர் உரங்கள் என்று அழைக்கப் படுகின்றனர்.

இந்த உயிர் உரங்களின் உள்ள பாக்டீரியாக்கள் காற்றிலுள்ள தரச்சத்தைக் கிரகித்து பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. மற்றும் நிலத்திலுள்ள பயிர்களு க்கு கிடைக்காத மற்றும் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கின்றன. உயிர் உரங்களின் வகைகள், நார்சத்து அளிப்பவை : அசோஸ்பைரில்லம் லிப்பொடிபர்ம் (நெல் ) இதனை நெல் பயிருக்கு மட்டும் பயன் படுத்த வேண் டும். அசோஸ் பைரில்லம் பிரெசிலென்ஸ் (இதர பயிர்கள்) இதனை நெல் தவிர்த்து மற்ற வேர் முடிச்சு இல்லாத எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்த லாம். ரைசொபியம், நிலக்கடலை மற்றும் நிலக்கடலை தவிர்த்த இதர பயிர்களில் பயன்படுத்தலாம். மணிச்சத்தை அளிப்பவை, பாஸ்போ பாக்டிரியா: பயிர் வளர்ச்சிக்குத் தேவைப் படும் சத்துக்களில் தார்ச்சத்திற்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்தாகும். பாஸ்போ பாக்டிரியாவானது எல்லா வகை பயிர்களுக்கும் அளிக்க கூடியது. இவை நிலத்திலுள்ள பயிர்களுக்கு கிடைக்காத மற்றும் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் நிலைக்கு மாற்றி பயிர்கள் உட்கொள்ளும்படி செய்கிறது.

உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள், விதை நேர்த்தி செய்தல்: ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட உயிர் உரங்களைத் தேவையான அளவு தண்ணீரில் கலந்து அதில் விதைகளை ஊறவைத்து பின்பு 30 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து பின்பு 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும் (தண்ணீருக்குப் பதிலாக குளிர்ந்த அரிசிக் கஞ்சியினை ஒரு பாக்கெட்டிற்கு அரை லிட்டர் என்ற அளவிலும் பயன்படுத்தலாம்). நாற்றங்காலில் இடுதல் : ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட உயிர் உரங்களுடன் ஒரு பாக்கெட்டிற்கு 5 கிலொ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் இரண்டரை கிலோ மணல் என்ற விகிதத்தில் கலந்து நாற்றங் காலில் சீராக தூவவேண்டும். நாற்றுகளின் வேரை நனைத்தல் : நாற்றங்காலின் ஒரு பகுதியில் சிறிய வரப்பை கட்டி தேவையான அளவு நீரைத் தேக்கி அதில் நான்கு பாக்கெட் உயிர் உரங்களைக் கரைத்து அக்கரைசலில் நாற்றின் வேர்களை 30 நிமிடங் களுக்கு குறையாமல் நனைத்து பின்பு உடனழயாக நடவு செய்ய வேண் டும்.

நேரடியாக வயலில் இடுதல் : ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட நான்கு பாக்கெட் உயிர் உரங்களை 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் 10 கிலோ மணல் ஆகியவற்றுடன் கலந்து நடவிற்கு முன்போ அல்லது பின்போ வயலில் சீராக தூவிவிட வேண்டும். உயிர் உரங்களின் நன்மைகள் : மண்வளம் பாதுகாக்கப் படுகிறது. வேர் வளர்ச்சி, தூர் வளர்ச்சி அதிகரிக்கப் படுகிறது. உயிர் உரங்களைப் பயன்படுத்து வதன் வாயிலாக 25 சதம் தார்ச்சத்து மற்றும் 20 முதல் 25 சதம் மணிச்சத்து சேமிக்கப் படுவதால் ரசாயன உரச் செலவு பெருமளவு குறைகிறது. பயிர் ஊக்கிகளான இன்டொல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின் மற்றும் வைட்ட மின் சத்துக்களான பயோட்டின் விட்டமின் பி உற்பத்தி செய்யப்படுவதால் இளம்பயிர்கள் சேர்ந்து வளர்ந்து எப்போதும் பசுமையாகக் காணப்படுகிறது. விதைகளின் முளைப்புத்திறன் பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூப்பிடித்தல் போன்றவை அதிகரிக்கப் படுகிறது.

காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை தார்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக் கிறது. மண்ணில் கரையாத மணிச்சத்து பயிருக்கு எளிதில் கிடைக்கும் வகை யில் நீரில் கரையும் தன்மையுள்ள மணிச்சத்தாக மாற்றப்படுகிறது. பயிர்களுக்கு வறட்சிய தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. மண்ணின் ரசாயன மற்றும் பவுதீக பண்புகளை உயர்த்தி 20 முதல் 25 சத கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இவற்றை உபயோகிக்கும் போது மண்ணில் நன்மை செய்யும் பூஞ்சாண நோய் கொல்லிகள் உற்பத்தி செய்யப்படுவதால் நோயை எதிர் க்கும் சக்தி உருவாகிறது. சுற்றுப்புறசூழல் கெடுவதில்லை. உயிர் உரங்கள் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை: உயிர் உரங்களைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தவுடன் எந்தவொரு பூச்சி மற்றும் நோய் மருந்துகளைக் கலந்து பயன்படுத்தக்கூடாது. உயிர் உரங்களை எந்தவொரு ரசாயன உரங்களுடனும் கலந்து பயன் படுத்தக் கூடாது. உயிர் உரங்களை மண்ணில் இடும்போது ஓரளவு ஈரப் பதம் இருக்க வேண்டும்.உயிர் உரங்களை சூரிய ஒளி வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதமான இடங்களில் சேமித்து வைக்கக்கூடாது. இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் கூறினர்.

Tags : professors ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...