×

ஆதனக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள அரசு இடங்கள் மீட்கப்படுமா? அதிகாரிகள் அலட்சியம்

கந்தர்வகோட்டை,செப்.10: ஆதனக்கோட்டையில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் அரசு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காசு கொடுத்து வாங்கும் இடம் என்றாலும் தொடர் கண்காணிப்பு இல்லையென்றால் ஆக்கிரமிப்பு நடந்து விடும். அதுவும் அரசு இடம் என்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவதுபோல் ஆகிவிடும். சமீபத்தில்தான் கறம்பகுடியில் பெரிய அளவில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தது மீட்கப்பட்டது. இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. உரிய அதிகாரிகள் அலட்சியம்படுத்தாமல் இருந்தால்தான் அரசு இடங்களை காப்பாற்ற முடியும். ஆதனக்கோட்டை அருகே பயணியர் மாளிகை எதிர்புறம் மேல்நிலைநீர்தேக்க தொட்டி அருகில் பெரியஅளவு ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புகார் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் யாரும் இதை கண்டுக்கொள்ளவில்லை. ஆகையால் ஆக்கிரமிப்பாளர் இடத்தை காசு கொடுத்து வாங்கியதுபோல் வைத்துள்ளார். குடிதண்ணீருக்கு காசு கட்டி பிடிப்பவர்களுக்கே சரியாக தண்ணீர் கிடைக்காத நிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர் தன்னுடைய வீட்டிற்கு 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்க மேல்நிலைநீர்தேக்க தொட்டியிலிருந்து ஏற்பாடு செய்துள்ளார்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால்மட்டுமே அரசு இடம் மீட்கமுடியும். இல்லையெனில் ஆக்கிரமிப்பாளருக்கு தாரைவார்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஆனால் இருக்கும் போது அரசு இடங்களை சிலர் கபளீகரம் செய்யாமல் பார்த்து கொள்வது சிறப்பான செயலாகும். ஆதனக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : government land ,Adhanakottai ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்