திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் புதுப்பாலத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை?

திருக்காட்டுப்பள்ளி, செப்.10: திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் ஆற்றின் புதுப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் ஒன்று கூட எரியவில்லை. இதனால் பாலம் முழுவதும் இரவு நேரத்தில் இருண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன்பாக பாலம் கட்டப்பட்டு காவிரியிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிந்து செல்கிறது. மேலும் இப்பாலத்தில் ரெகுலேட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீரை தேக்கி பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு வருகிறது. இப்பாலம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்ததாலும், தொடர்ந்து கனரக வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதாலும் பாலம் பலவீனமடைய கூடும் என்பதால் இப்பாலத்துக்கு மேற்கே போக்குவரத்துக்கு என தனியாக காவிரி ஆற்றின் குறுக்கே பூண்டி- திருக்காட்டுப்பள்ளி சாலைகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் ரூ.20 கோடியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் கட்டப்பட்டு 12.06.2014ல் திறக்கப்பட்டது. இப்புதிய பாலம் வழியாக தான் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருவையாறு, கோவிலடி, கல்லணை, கும்பகோணம், லால்குடி, திருச்சி செல்லும் பயணிகள் பேருந்துகள், லாரிகள், வேன்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் செல்கின்றன. இரவு நேரங்களில் பாலத்தின்மேல் செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் நலனை கருதி பாலத்தின் இருபுறமும் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் பராமரிப்பு பழமார்நேரி பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.

Advertising
Advertising

பாலத்தின் மேல் ஆரம்ப காலத்தில் அனைத்து விளக்குகளும் பிரகாசமாக ஒளி வீசின. ஓராண்டு கடந்த நிலையில் ஒன்று விட்டு ஒன்று என்ற விகிதத்தில் விளக்குகள் எரிந்து வந்தன. தற்போது ஒரு விளக்கு கூட எரிவதில்லை. வாகன விளக்கு தான் வெளிச்சம். இதனால் இரவு நேரங்களில் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் ஆகியோர் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி குடிகாரர்கள் கொட்டமும் அதிகமாக உள்ளது. எனவே பாலத்தில் மின்விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: