குளத்தை தூர்வாரும்போது சோழர் காலத்து நாணயங்கள் கண்டெடுப்பு

ஜெயங்கொண்டம், செப்.10: ஜெயங்கொண்டம் அருகே குளத்தை தூர்வாரும்போது சோழர் காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தாரிடம் செப்பு நாணயங்கள் ஒப்படைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் நந்ததேவன் என்கிற குளம் உள்ளது. இந்த குளம் பொதுமக்களால் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி வரும் நிலையில் அரசு சார்பில் ஒப்பந்ததாரர் ஆளநாகராஜன் என்பவர் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கடந்த 3 நாட்களாக குளத்தை தூர்வாரி கொண்டிருந்தார்.

நேற்று குளத்தை தூர்வாரிய மண்ணை டிராக்டரில் வைத்து மற்றோரிடத்தில் கொட்டி வந்தனர். அப்போது டிராக்டரில் இருந்து தூர்வாரிய மண்னை கொட்டியபோது பழங்காலத்து செப்பு நாணயம் சிதறி கீழே விழுந்துள்ளன. இதை பார்த்து அங்கு கூடியிருந்த சிறுவர்கள் எடுத்து பார்த்துள்ளனர். இதை கண்ட ஆளநாகராஜன், அகரம் கிராம நிர்வாக அலுவலர் அருணுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அருண், சிதைந்து கிடந்த மண்பானை மற்றும் பழங்கால 200க்கும் மேற்பட்ட செப்பு நாணயங்களை கைப்பற்றி ஆண்டிமடம் தாசில்தார் குமாரைய்யாவிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த செப்பு நாணயம் சோழர்காலத்து நாணயமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tags : Collier Coins Exploration When Pond ,
× RELATED காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி...