மரக்கடையில் பயங்கர தீ விபத்து

விளாத்திகுளம், செப். 10: விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் துரைசிங்கம். பஜாரில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல்  வியாபாரம் முடிந்து துரைசிங்கம், கடையை பூட்டி விட்டுச் சென்றார். இந்நிலையில் இரவில் மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ ஜூவாலையாக பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மரக்கட்டைகளில் கொழுந்துவிட்டு எரிந்தது. பொதுமக்களும் டிப்பர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து அணைக்க முயன்றனர். ஆனால் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.இதையடுத்து அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். கடையில் இருந்த வேங்கை, கோங்கு, தேக்கு மரக்கட்டைகள், ஆஸ்பெட்டாஸ், சிமென்ட் மூட்டைகள் உட்பட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : woods ,
× RELATED ஸ்பெயினில் குதிரைகள் தீ மிதிக்கும்...