திடீர் பழுதால் லாரி மீது மோதியது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கவிழ்ந்த மினிலாரி டிரைவர், பெண் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு

மார்த்தாண்டம், செப். 10:   நாகர்கோவிலை அடுத்த எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராகவன் (49). இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி மினிலாரியை ஓட்டிச்சென்றார். மார்த்தாண்டம் சந்திப்பை தாண்டி மேம்பாலம் வழியாக சென்ற போது திடீரென மினிலாரியின் ஜாயின்ட் ராடு உடைந்தது. அப்போது நிலை தடுமாறி எதிரே களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் நோக்கி, புத்தளத்தை சேர்ந்த வெற்றிவேல் முருகன்(46) என்பவர் ஓட்டி வந்த லாரி மீது மோதியது.அதே வேகத்தில் மினி லாரி கவிழ்ந்தது. ராகவன் மினிலாரிக்கு இடையில் சிக்கிக்கொண்டார். கவிழ்ந்த மினிலாரியில் இருந்த கயிறு மற்றும் கேரியர் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தின் கீழே போய் விழுந்தது. அதில் கயிறு, அருமனை மாலைக்கோடு பகுதியைச் சேர்ந்த மேரி(53) என்பவர் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். மேலும் வெற்றிவேல் முருகன் ஓட்டி வந்த லாரியின் பின்புறம் வந்த கார் லாரி மீது மோதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மினிலாரியில் சிக்கி படுகாயமடைந்த ராகவனை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரி டிரைவர் வெற்றிவேல் முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.இந்த விபத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குழித்துறையில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் பாலத்தின் கீழ் பகுதி வழியாக போக்குவரத்தை மாற்றி விட்டனர். சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த மினிலாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: