திண்டிவனம் அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ₹2 லட்சம் நகை, பணம் கொள்ளை

விக்கிரவாண்டி, செப். 10: திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை குளக்கரை தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (55). இவர் கோயில்களில் பம்பை, உடுக்கை வாசித்து வருகிறார். இவருக்கு குணசேகரன், ஆனந்த்பாபு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் வெளிப்புற கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் தங்கநகை மற்றும் கோயில் கட்டுவதற்கு வசூல் செய்து வைத்திருந்த பணம் மற்றும் மகனின் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த பணம் என மொத்தம் ரூ.2 லட்சம் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags : house ,dentist ,Tindivanam ,
× RELATED அம்பத்தூரில் அடகு கடை உடைத்து நகை, பணம் கொள்ளை