பிரேக் பிடிக்காத லாரி மோதி முதியவர் பலி

பண்ருட்டி, செப். 10: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. போதிய பாதுகாப்பு வசதிகளும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று நேற்று வேகமாக பண்ருட்டியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் பிரேக் பிடிக்காததால் நடந்து வந்த 70 மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பின்னர் சிக்னலுக்காக காத்திருந்த தனியார் வங்கி ஊழியர்கள் பண்ருட்டி பாரதியார் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (24), ராஜீவ்காந்தி (37), திருவதிகை சிவக்குமார் (47), திராசு பரமானந்தம் (37) ஆகியோர் மீதும் மோதியது. பின்னர் கும்பகோணம் சாலையில் நின்றிருந்த கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஏராளமானோர் அலறியடித்துக்கொண்டு ஓடினர். டிராபிக் போலீசாரும் அலறியடித்துக்கொண்டு ஓடி உயிர் தப்பினார். பின்னர் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் கார் அப்பலம்போல் நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Related Stories: