×

கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுக்களை கிழித்த அதிமுகவினர்

பண்ருட்டி, செப். 10: பண்ருட்டி கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுக்களை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூரில் தொடக்க கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2639 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தேர்தல் நேரத்தில் வாக்களிக்க 1955 பேர் தகுதியானவர்கள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு இந்த கூட்டுறவு வங்கியில் தேர்தல் நடந்தபோது அசம்பாவிதம் ஏற்பட்டதையடுத்து கூட்டுறவு வங்கியின் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பதவிக்காக மனு தாக்கல் நடந்தது. தேர்தல் அலுவலர் தேவி தலைமையில் இன்ஸ்பெக்டர் மலர்விழி முன்னிலையில் அதிமுக, திமுக, பாமக, தவாக கட்சியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இந்நிலையில் அதிமுகவினர் திடீரென தேர்தல் அலுவலர் அறைக்கு சென்று அங்கு இருந்த தேர்தல் மனுக்களை எடுத்து கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி தேவி முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தொடக்க கூட்டுறவு வங்கி இயக்குனர்களுக்கான தேர்தலையொட்டி வேட்பு மனு பெற வந்தேன். இதில் 62 மனுக்கள் பெறப்பட்டது. இதையடுத்து ஒப்புதல் சீட்டு வழங்க ஆயத்தமானபோது திடீரென உள்ளே நுழைந்த பாண்டுரங்கன், பாலு ஆகியோர் என்னிடம் இருந்த 30 வேட்பு மனுக்களை பறித்து கிழித்தனர். நான் அதை தடுக்க முயன்றபோது தோல்பட்டையில் வீக்கம் ஏற்பட்டது. மேலும் சிறு நக கீறல்கள் ஏற்பட்டது. இதை தடுக்க முயன்ற வங்கி செயலாளர் ரவி மீதும் நக கீறல்கள் இருந்தது. எனவே வேம்பு மனுவை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கிடையே கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்து தேர்தல் அதிகாரி தேவி நோட்டீஸ் ஒட்டினார். கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனுக்களை அதிமுகவினர் கிழித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : AIADMK ,election candidates ,
× RELATED அதிமுக தொழில்நுட்ப பரிவு மண்டலச்...