கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு

கடலூர், செப். 10: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்
பாபு கூறினார்.கடலூர் மாவட்டத்தில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 9 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் காய்ச்சல் குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நோயாளிகளுக்கு தேவையான கஞ்சி, நிலவேம்பு குடிநீர், ஓஆர்எஸ் போன்ற உப மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகளை சோதனை செய்வதற்கு ஆய்வகம் தயாராக உள்ளது. மேலும் நோய் வராமல் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான கொசுவலை, ஆய்வகங்கள் போன்றவை தயார் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் டெங்கு பரவாமல் இருக்க ஊராட்சி மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்காமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் காய்ச்சல் ஏற்படும்போது சுயமருத்துவம் செய்யாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Tags : Cuddalore district ,
× RELATED கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொய்...