சூதாட்டத்தில் கைது செய்ததால் எஸ்ஐக்கு கொலை மிரட்டல் 2 பேருக்கு சிறை

வந்தவாசி, செப்.10: வந்தவாசி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வந்தவாசி போலீஸ் சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் உத்தமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அச்சரப்பாக்கம் சாலை, குளத்துமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காட்டன் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த நெமந்தகார தெருவை சேர்ந்த அனிபா(45), அச்சரப்பாக்கம் சாலையை சேர்ந்த சலாவுதீன்(40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சீட்டுகள் மற்றும் ₹200 பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தபோது சலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் உத்தமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து உத்தமன் தெற்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிந்து சலாவுதீன் மற்றும் அனிபா ஆகியோரை கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், மாஜிஸ்திரேட் ராஜேஸ்வரி உத்தரவின்பேரில் இருவரையும் வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : SI ,murder ,
× RELATED எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட...