×

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை

திருவண்ணாமலை, செப்.10: பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைத்து நடத்தும் ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,புதுடெல்லி தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கடிதத்தின்படி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக்ஷா) இணைந்து அனைத்துப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் கண்காட்சியை பள்ளி அளவில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டம் அளவில் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களை மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை 'Science and Technology for Sustainable Development' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு படைப்புகளை தயாரித்து நடத்திட புதுடெல்லி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்க செய்து, அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க வழிவகை செய்திட வேண்டும்.

பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதியும், கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி அக்டோபர் 10ம் தேதியும், வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சி அக்டோபர் 14ம் தேதி மற்றும் 15ம் தேதி நடத்தப்பட வேண்டும்.
மேலும், அக்டோபர் 15ம் தேதி அப்துல்கலாம் பிறந்த நாளை (இளைஞர் எழுச்சி நாள்) கொண்டாடுவது குறித்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
அறிவியல் கண்காட்சி நடத்திட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியால் (சமக்ர சிக்ஷா) வழங்கப்படும் நிதியை அவ்வியக்ககத்தால் வழங்கப்படும் அறிவுரைகளுக்கு உட்பட்டு நிதியை பயன்படுத்திக்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர்கள் ஆகியோர்களின் வழிக்காட்டுதலோடு சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். கண்காட்சி நடத்தப்படும் நாளில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Science Exhibition ,Schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...