மாவட்டம் முழுவதும் 20 பேர் கைது எதிரொலி 100 ேபாலி டாக்டர்களை சுற்றி வளைக்க சிறப்பு குழுக்கள் திட்டம் அதிகாரிகள் தகவல்

வேலூர், செப்.10:மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பட்டியலிடப்பட்ட 100 பேரை பிடிக்க சிறப்பு குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு அரக்கோணம் பகுதியில் டெங்கு பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு போலி டாக்டர் ஒருவர் தவறான சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற சம்பவம் தற்போது நடைபெறக்கூடாது என்பதற்காகவும், போலி டாக்டர்கள் குறித்த புகார்களை தொடர்ந்தும் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை அடையாளம் கண்டு களையெடுக்க 35 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் அந்தந்த பகுதிகளின் மருத்துவ அதிகாரிகள், 35 எஸ்ஐக்கள், 35 எஸ்எஸ்ஐக்கள், 35 ஆண் கான்ஸ்டபிள்கள், 35 பெண் கான்ஸ்டபிள்கள் இடம்பெற்றனர். இக்குழுக்கள் மூலம் நேற்று அதிகாலை தொடங்கி இரவு வரை ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடந்தது. இதில் திருப்பத்தூரில் 6, பரதராமியில் 4, பனப்பாக்கம், நெமிலி, ராணிப்பேட்டை, ஆம்பூர், பேரணாம்பட்டு, சோளிங்கர் ஆகிய இடங்களில் தலா 1, வாணியம்பாடியில் 3 என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில், வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர், உம்ராபாத், குடியாத்தம், பேரணாம்பட்டு, திருவலம், ஆற்காடு, சோளிங்கர், பாணாவரம், அரக்கோணம் என மாவட்டம் முழுவதும் 100 போலி டாக்டர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 8, 10, பிளஸ்2 முடித்தவர்கள், டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள், பட்டப்படிப்பு, பட்டய படிப்பு என முடித்து விட்டு அலோபதி மருத்துவத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. இவர்களையும் சுற்றிவளைத்து பிடிக்க சிறப்புக்குழுக்கள் திட்டமிட்டுள்ளன. இக்குழுக்கள் அனேகமாக ஓரிரு வாரங்களில் பட்டியலிடப்பட்ட போலி டாக்டர்கள் அனைவரையும் கைது செய்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
இதுகுறித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் கூறுகையில், கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கிளினிக்குகள் வைத்து பொதுமக்களை ஏமாற்றிய 20 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான மருத்துவம் படிக்காதது, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். தற்போது இந்த செய்தி வெளியானதால் பட்டியலிடப்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அதனால் அவர்களை பிடிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் வேட்டை தொடரும். மாவட்டத்தில் போலி டாக்டர்கள் இல்லாத நிலையை உருவாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Tags : teams ,police doctors ,
× RELATED மாநில அளவிலான வாலிபால் போட்டி கடலூர்,திருவாரூர் அணிகள் சாம்பியன்