வேலூர் பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் வருகை, தேர்வு மதிப்பெண் விவரங்கள் பெற்றோருக்கு அனுப்ப புதிய ‘ஆப்’ மாநிலத்திலேயே முதன்முறையாக நடைமுறை

வேலூர், செப்.10:மாணவர்களின் அன்றாட வருகை, தேர்வில் பெறும் மதிப்பெண் விவரங்களை பெற்றோர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் புதிய ‘ஆப்’ முதன்முறையாக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களின் வருகை, அவர்கள் மாதாந்திர தேர்வு, பருவ தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் தொடர்பான முழு விவரமும் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக உடனுக்குடன் பெற்றோர்கள் அறிந்து கொள்கின்றனர்.இந்நிலையில், இதற்காக புதிய மொபைல் ‘ஆப்’ செயலியை வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உருவாக்கி அதை மாநிலத்திலேயே முதன்முறையாக அந்த கல்லூரி செயல்படுத்தியுள்ளது. இந்த ‘ஆப்’ நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இந்த புதிய ஆப் செயல்பாட்டை கல்லூரி முதல்வர் வி.குமார் தொடங்கி வைத்தார்.
Advertising
Advertising

இந்த செயலி மூலம் மாணவரின் கல்லூரி வருகை விவரம், செமஸ்டர் தேர்வு மதிப்பெண் விவரங்கள் போன்றவை உடனுக்குடன் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக சென்று சேர்ந்து விடும். மாநிலத்திலேயே இப்புதிய ‘ஆப்’ மூலம் மாணவரின் நிலையை பெற்றோருக்கு தெரியப்படுத்தும் முதல் அரசு பொறியியல் கல்லூரியாக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி உள்ளதாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் கற்கும் திறன், கல்லூரி வருகை நிலவரம், விடுப்பு நிலவரம் போன்ற அனைத்தையும் பெற்றோர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய ‘ஆப்’பை கல்லூரியின் இயந்திரவியல்துறை தலைவர் பி.பிரவீன்ராஜ் வடிவமைத்துள்ளார். இப்புதிய ‘ஆப்’ நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கலைவாசன், காந்தஷபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: