வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெங்களூரு டிரைவர் தீக்குளிக்க முயற்சி மனைவி வாழ வர மறுத்ததால் விரக்தி

வேலூர், செப்.10:வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெங்களூருவை சேர்ந்த வேன் டிரைவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கேனில் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வாலிபரை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரின் உடலில் தண்ணீர் ஊற்றினர். தகவலறிந்து விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கூறுகையில், ‘நான் பெங்களூரு ஜலஹள்ளி தாலுகாவை சேர்ந்த வேன் டிரைவர் மோகன். எனக்கு கடந்த 2010ம் ஆண்டு வேலூர் வேலப்பாடியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது. தற்போது, 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உறவினர்களை சந்திக்க, வேலூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பின்னர், என் மனைவி பெங்களூருவுக்கு திரும்பவில்லை. தற்போது எனது மனைவி, வேலூர் கஸ்பாவில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த நான் பலமுறை வேலூருக்கு வந்து மனைவியை வீட்டிற்கு அழைத்தேன். அப்போது, எனது மனைவி என்னுடன் வர மறுத்துவிட்டதாக அவரது உறவினர்கள் கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த நான் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் எனது மனைவி மற்றும் குழந்தையை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டனர்.இதனால், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி மனைவியை சந்திக்க உறவினர்களுடன் வேலூருக்கு வந்தேன். அப்போது, எனது மனைவியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் எங்களை தாக்கினர். இதுகுறித்து பெங்களூருவிலும், வேலூர் தெற்கு போலீஸ் நிலையம், எஸ்பி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏற்பட்ட விரக்தியில் தற்ெகாலைக்கு முயன்றேன்’ என்று தெரிவித்தார்.இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரது மனைவி மற்றும் உறவினர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: