மோடி - ஜின் பிங் சந்திக்கும் மாமல்லபுரத்தில் சீனாவின் உறவை விவரிக்கும் சிற்பங்கள், மண்டபத்தை சீரமைக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம், செப்10. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.இந்தியாவிற்கு வரும் பல நாட்டு அதிபர்களும் நாட்டின் தலைநகரான புதுடெல்லியில், தங்களது அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்துவர். வரலாற்றில் முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், இந்திய பிரதமரை  நாட்டின் தென் கோடியில் உள்ள சுற்றுலா நகரில் அதிகாரப்பூர்வமாக சந்திப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்புக்கு மாமல்லபுரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதற்கு அடிகோலிட்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.    சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம் ஆகிய அழியா சின்னங்கள் பெரும்  புகழுடன் விளங்குகின்றன. காஞ்சிபுரம் நகரத்தை தலை நகரமாகக் கொண்டு ஆட்சி நடந்த காலகட்டத்தில், மாமல்லபுரம் வளர்ச்சி பெற்ற துறைமுக நகரமாக இருந்தது என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.

இந்த வரலாற்றினை விளக்கும் ஓவியம் ஒன்று, மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் இன்றும் சுற்றுலா பயணிகளின் கண்களை ஈர்க்கிறது. மேலும், 7ம் நூற்றாண்டில் சீன பயணி யுவான் சுவாங் மாமல்லபுரம்  துறைமுக நகரத்தில் வந்து இறங்கியதும் இங்கிருந்த நவரத்தினங்கள், பட்டு சேலைகள் ஆகியவற்றை பெற்று கொண்டு பீங்கான் பொருட்களை பண்டமாற்று முறையில் கொடுத்து சென்றதும் வரலாற்றில்  விவரிக்கப்பட்டுள்ளது.இதற்கு அடையாளமாக மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வழிப்போக்கர் மண்டபம் ஒன்றில் சீன பயணி யுவான் சுவாங்கின் உருவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாமல்லபுரம் நகரில் உள்ள கணேச ரதத்தில் சீன கலைப்பாணி சிங்க முகம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த கணேச ரதத்தினை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மண்டபத்தை யாரும் பராமரிக்கவில்லை. இதனால் மண்டபம் முழுவதும் பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்திப்பு நடப்பதற்கு முன், இந்த மண்டப த்தை சீரமைத்து இருவரையும் இந்த மண்டபத்தினை சுற்றி காட்ட ஏற்பாடு செய்ய வேண்டுமென  வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : China ,Mamallapuram ,
× RELATED சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும்...