புதுப்பட்டினம் ஊராட்சியில் பொது பயன்பாட்டுக்கான இடத்தை தனியார் ஆக்கிரமிக்கும் அபாயம்

காஞ்சிபுரம், செப்.10: புதுப்பட்டினம் ஊராட்சியில் பொது பயன்பாட்டுக்கான அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து கலெக்டர் பொன்யையாவிடம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பக்கீர் முகமது அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.திருக்ககழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் ஊராட்சியில் சுமார் 3.46 ஏக்கர் நிலம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊராட்சியின் பொது பயன்பாட்டில் உள்ளது. இந்த இடத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட  சாலைகள் அமைத்து தரப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன.மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளின் திடக்கழிவுகளும் இந்த இடத்தில் கொட்டப்படுகிறது. இங்கு விளையாட்டு திடல், பூங்கா, ஓய்விடம், நடைபயிற்சி பகுதி என இதுவரை பஞ்சாயத்து சார்பில்  இடம் ஒதுக்கவில்லை.

எதிர்காலத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை, குப்பைக் கிடங்கு, விளையாட்டுத் திடல், பூங்கா, ஓய்விடம், நடைபயிற்சி பகுதி, அரசு கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார  மையம், சமுதாய கூடம் உள்பட பொது பயன்பாட்டு திட்டங்களுக்கு என இடம் ஒதுக்க வேறு எந்த இடமும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லை.கிராமத்திற்கு உட்பட்ட பெரும்பாலான இடங்கள் இசிஆர் சாலைக்காகவும், புதிய இசிஆர் சாலைக்காக, சாலை விரிவாக்கப் பணி, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக என பல இடங்களில் அரசால்  கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இடத்தின் பரப்பு அதிகமாக உள்ளதாலும், இசிஆர் சாலை வந்தபிறகு நிலத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துவிட்டதால் சில நில அபகரிப்பாளர்களும், சமூக விரோதிகளும் அந்த இடத்தை  சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். இதனை கிராம பொதுமக்களுடன் இணைந்து தடுத்துள்ளேன். ஆனாலும் இந்தப் பகுதி தொடர் ஆக்கிரமிப்பு அபாயத்தில் உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : land ,
× RELATED அனுமன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு