மணலி புதுநகர் பகுதியில் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி

திருவொற்றியூர்: மணலி புதுநகர் குழந்தை இயேசு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.  மணலி புதுநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள குழந்தை இயேசு பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து மீஞ்சூர், பொன்னேரி சென்னை உயர் நீதிமன்றம், தங்கசாலை,  மாதவரம், கோயம்பேடு போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்தில்  பயணம் செய்கின்றனர்.  இந்நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள், பெண்கள், முதியவர்கள் வெயில், மழைக்காலங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

Advertising
Advertising

அருகில், மரங்கள் கூட ஏதும் இல்லாததால் வெயில் காலங்களில் வெப்பம் தாளமுடியாமல் முதியவர்களும், கர்ப்பிணிகளும் பலமுறை மயங்கி விழுந்து உள்ளனர். அதேபோல் மழை காலங்களில், பள்ளி மாணவர்கள் மழையில் நனைவதோடு,  பாடப்புத்தகங்களும் நனைந்து சிரமப்படுகின்றனர்.அதுமட்டுமின்றி பஸ்சுக்காக பயணிகள் சாலையில் காத்திருக்கும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தில் இருக்கை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளுடன் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று  அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி பெரும் சிரமத்துடனே பயணிகள் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்கு நிழற்குடை  அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: