மருத்துவமனையில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையை வீட்டு சிறையில் வைத்த மகனால் பரபரப்பு: மீட்க வந்த போலீசை விரட்டியடித்தார்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், 23-வது தெருல் உள்ள திருவள்ளுவர் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரன் (80). இவரது மனைவி ஸ்ரீ தேவி. இவர்களது மகன் உதயகுமார் (40). மனநலம் பாதிக்கப்பட்ட உதயகுமார், கடந்த 10 ஆண்டுகளாக  சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், மதுரவாயலில் உள்ள ஒரு மருத்துவமனையில் உதயகுமாரை சேர்த்து சிகிச்சை அளிக்க பெற்றோர் முடிவு செய்தனர். மேலும், சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, நேற்று முன்தினம் அவரை  மருத்துவமனையில் அனுமதிப்பதாக தெரிவித்தனர்.   அதன்படி, மருத்துவமனை ஊழியர்கள் நேற்று முன்தினம் சந்திரன் வீட்டுக்கு வந்தனர். அவர்களை பார்த்த உதயகுமார், மருத்துவமனைக்கு செல்ல மருத்து அடம்பிடித்தார். கதறி அழுதார். அப்போது, சந்திரன் தனது மகனை சமாதானம் செய்து,  மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார்.

இதை ஏற்க மறுத்த உதயகுமார் திடீரென தனது தந்தை சந்திரனை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, ‘‘வெளியே விடமுடியாது’’ என்று கூச்சலிட்டுள்ளார். இதுபற்றி மருத்துவமனை ஊழியர்கள், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டுக்குள் அடைக்கப்பட்ட சந்திரனை மீட்க முயன்றனர்.  அப்போது உதயகுமார், ‘‘என் தந்தையை வெளியே விடமாட்டேன். அவர் வெளியே வந்தால், என்னை மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்,’’ என்று கூச்சலிட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றபோது, திடீரென  ஆவேசமடைந்த உதயகுமார், அங்கிருந்த கற்களை எடுத்து போலீசார் மீது சரமாரியாக வீசி, விரட்டி அடித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும் சந்திரனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: