திருச்சி, மதுரை கோட்டத்தில் 50% பேர் வடமாநிலத்தவர் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் எம்பிக்கள் ஆதாரத்துடன் புகார்

திருச்சி, செப்.5: திருச்சி, தெற்கு ரயில்வே கோட்ட எம்பிக்களுடனான தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற மதுரை எம்பி வெங்கடேஷன் கூறுகையில், ‘தேஜஸ் ரயிலை தமிழ்ச் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என 15 எம்பிக்கள் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளோம். திருச்சி மதுரை கோட்டத்தில் கமர்சியல் செக்சனில் 975 பேர் பணியாற்றுகின்றனர். 467 பேர் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சரிபாதிக்கு மேல் தமிழ் தெரியாதவர்கள். செக்கர், பார்சல் சர்வீஸ் பிரிவுகளில் உள்ளனர். இதுபோன்ற நிலை வேறு எங்கும் இல்லை. 50 சதவீதம் பேர் இந்தி தெரிந்தவர்கள் உள்ளனர். தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மதுரை-கோவை அகல ரயில்பாதை அமைத்து 9 ஆண்டுகள் ஆகியும் போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை’ என்றார்.

Advertising
Advertising

ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, ‘ராமேஸ்வரத்துக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும். ஏற்கனவே நிறுத்திய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து மண்டபத்துக்கு புயல், மழை காலங்களில் ரயில் இயக்க முடியவில்லை. எனவே மண்டபத்தை ரயில் முனையமாக மாற்றக்கோரி உள்ளேன். பல ஊர்களுக்கு ரயில் நிறுத்தம் கேட்டுள்ளேன்’ என்றார்.கரூர் எம்பி ஜோதிமணி கூறுகையில், ‘ரயில்வே அதிகாரிகள் அளிக்கும் பதில்கள் திருப்திகரமாக இல்லை. சரியான பதில் கேட்டுள்ளோம். மணப்பாறையில் முக்கிய ரயில்கள் நிறுத்த வேண்டும். வேடசந்தூருக்கு புதிய ரயில்வே நிலையம், கரூர் தொகுதிக்கு மாங்களூர் ரயிலில் அதிக கோட்டா வேண்டும். விராலிமலை மண்டையூரில் ரயில்வே நிலையம் கேட்டுள்ளோம். 54 கோரிக்கை வைத்துள்ளேன். ரயில்வே துறையில் தமிழ் புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளோம். தமிழக இளைஞர்களுக்கான வேலையை கொடுக்காமல் வடஇந்திய மாநில இளைஞர்களை புகுத்துவதை கேள்வி எழுப்பி உள்ளோம்’ என்றார்.

பாரிவேந்தர் எம்பி கூறுகையில், ‘பெரம்பலூர் தொகுதியை பொறுத்தவரை லால்குடியில் மாங்களூர், குருவாயூர் எக்ஸ்பிரஸ் நிறுத்த வேண்டும். பெரம்பலூர் தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான பெரம்பலூர், அரியலர், துறையூர், நாமக்கல் 4 பகுதியை இணைத்து ரயில்வே லைன் விட வேண்டும்.அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கூறுகையில், ‘தேனி தொகுதியில் போடிநாயக்கனூர் மதுரை அகல ரயில்பாதை திட்டம் (90.41 கி.மீ., நீளம்) நீண்ட நாளாக தாமதமாக நடக்கிறது. 1 இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். திண்டுக்கல்- சபரிமலை ரயில்பாதை திட்டத்துக்கு இரண்டு சர்வே பணிகள் நடந்துள்ளது. இது விரைவில் அமைய வேண்டும். நேசனல் ரயில் அண்டு டிரான்ஸ்போர்ட் இன்ஸ்ட்டியூட் தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சி பெறும் வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைக்கும் என்றார்.

Related Stories: